Community

சுதந்திர இந்தியா மலர்ந்தது

பாரதமக்கள் அனைவருக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் :smiley: :sparkles:

நாம் இன்று சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவின் நிலை பற்றி காண்போம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நாம் நம் இந்திய சுதந்தர தினத்தை கொண்டாடுகின்றோம். இன்று நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் 73 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் உதிரம் சிந்தி உயிரை துறந்து பெற்றுத்தந்ததே. அன்று வெள்ளைக்காரனிடம் அடிமை பட்டு கிடந்தது நம் நாடு. பேச்சில், செயலில், நடைமுறையில் எதிலுமே இல்லை சுதந்திரம். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாகவே இந்தியர்கள். பெண் கல்வி மறுப்பு; பெண் சிசு கொலை; பெண்கள் சொத்தில் உரிமையின்மை என்று பல்வேறுகாரணங்கள். அனைவருக்கும் கல்வி இன்மை; கல்விக்கேற்ற வேலையின்மை; வேலைக்கேற்ற கூலியின்மை. வெள்ளையனின் கைப்பாவைகளாக இந்தியர்கள். ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை மறந்த நம் தேசத்து மக்கள். தனக்கென வாழா தலைமையாளர்களின் தலையெடுத்த மக்களிடையே தன்மான உணர்வை ஊட்டி இந்தியன் என்ற இறுமாப்பை கொடுத்து வேற்றுமையில் ஒற்றுமை உணர்வு கொண்டவனே இந்தியன் என்று நிலைநாட்டின. சுதந்திர இந்தியா மலர்ந்தது :india:.

எத்தனையோ கொடுமைகளை தாங்கிக்கொண்டு அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்றுத்தந்த அந்த தேசபிதாக்களையும் பாரதமக்களின் வீரத்தையும் எண்ணி வியக்கிறேன். இன்று கல்வி, உணவு, உழவு, விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி, விண்வெளி என எல்லாத்துறைகளிலும் ஏற்றமும் மாற்றமும் வந்துள்ளனவென்றால் அது மிகையில்லை. “ஆயுதம் செய்வோம் காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம்” என்ற பாரதியின் அனைத்து கனவுகளும் நனவாகின்றன. “ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை கான்” என்னும் நிலை. பெண்களின் அதீதவளர்ச்சி. இதயத்தில் வலிமைகொண்ட இளைஞர்கள் கூட்டம், உள்ளத்தில் உறுதிகொண்ட உழைப்பாளர்கள் கூட்டம். எங்கும் கணினி எதிலும் கணினி. அன்று அம்புலியில் பாட்டி வடைசுட்ட கதை இன்றோ அம்புலிக்கே சென்று வடைசுட்டு வரும் காலம். என்ன விந்தை என்ன வளர்ச்சி!!

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே யெண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல் லறிவு வேண்டும்;

என்ற பாரதியின் வாக்குப்படி வாழ்வோம்!! வளர்வோம்!!

இக்கட்டுரை என் பள்ளியில் நடந்த 66 வது சுதந்திர தின விழாவில் நான் பேசியது. இந்த நன்னாளில் உங்களுடன் இதை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஜெய்ஹிந்த் :india: :pray:

3 Likes