Community

மூன்றாம் தலைமுறை

மூன்றாம் தலைமுறை

பருத்தி பிஞ்சின் வாசம்
மொளச்ச கருச காட்டுல
களையெடுத்த செதுக்கியால… தொப்புள்கொடி
அறுத்துப் போட்டா ஆத்தா
எட்டாவது புள்ளையா என்னைய…!

கம்மங்காட்டு கருத
களவாண்டு போனவகள…
கண்டமேனிக்கு
ஏசிட்டிருந்த அத்த(தை)…
நான் அழும் சத்தம் கேட்டு வந்து கையிலேந்தி…!
தூரத்து தோட்டத்துல…
வரப்பு தண்ணிய வாழைக்கு பாய்ச்சுற
மாமனை ஒய்யாரமா அழைச்சவ
அந்த கஞ்சிப்பானை வெல்லக்கட்டிய
எடுத்து வரச்சொல்ல…!

மம்பட்டிய தூக்கிப் போட்டு
எடுத்த வந்த வெல்லகட்டியில் சேனை
வச்ச எம்மாமன் களையெடுக்கும்
பொம்பளைங்க கையில
ரெட்டிப்பா தந்தானே கூலிய…!

எனக்கு நாலு… எம்மவளுக்கு
ரெண்டுண்ணு ஆனாலும்…

இன்னைக்கு

எம்பேத்திக்கு புள்ள வரம் இல்லையாம்…
டவுனுக்கு சொந்தகாரியானதால
எள்ளு திணை சோளம் கம்பு
எதுந்தெரியல தெனந்திங்குற
அரிசி தான் நெல்லுண்ணும் தெரியல…

என்னத்த சொல்ல…
நாகரிக தலைமுறை
நஞ்சதான திங்கிது
பொறக்குற புள்ளையக்கூட
மிஷின சுமக்க சொல்லுது…!

                                                இரா. ஜோ
                                                18.07.2020
                                       (ஜோதிபெருமாள்)
                                             8015134808
                                     rpjothinigan@gmail.com
2 Likes