Community

எதிர்பாராத நிகழ்வு

எதிர்பாராதது (சிறுகதை)
வசந்ததீபன்
அந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு நாங்கள் போயிருந்தோம். மழை காலத்து ஈசல்கள் போல எங்கு பார்த்தாலும் ஜனங்கள். ஒரே நெரிசலாக இருந்தது. தீச்சட்டி எடுப்பவர்கள் , ஆயிரம் கண் பானை எடுப்பவர்கள் , சேத்தாண்டி வேசம் போடுபவர்கள் , அவர்களோடு வந்திருக்கும் ஆண்கள்…பெண்கள்…குழந்தைகள் , கொட்டுக்காரர்கள் , தப்படிப்பவர்கள் என மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது.

பாதுகாவலுக்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியபடி திரிந்தார்கள்.

ஒரு வழியாக சாமி தரிசனம் முடித்து விட்டு… கோவிலுக்கு தென்புறத்தில் ராட்டினங்கள்…மரணக்கிணறு…சர்க்கஸ்…பாம்பு தலையுள்ள மீன் கன்னி…நாய்களின் அதிசய விளையாட்டு என பார்த்து விட்டு கடைவீதிப் பக்கமாக வந்து கொண்டிருந்தோம்.

எதிரே யானை ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் மேல் பாகன் ஒருவன் உட்கார்ந்தபடியே…சிறு…சிறு குழந்தைகளை அதன் மேல் ஏற்றி முன்னும் பின்னுமாக நடந்து… தும்பிக்கையினுள் விரல் நுழைத்து…யானையின் எச்சிலை குழந்தைகளின் நெற்றியிலும் , வாயிலிலும் வைத்துவிட்டு…குழந்தைகளை உரியவர்களிடம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தான்.

என் கையில் வைத்திருந்த என் மகனை யானையின் மேல் ஏற்றிவிட ஆசைப்பட்டு… அவனை யானைக்காரனிடம் நீட்டினேன். யானையின் மேலிருந்தபடியே கையை நீட்டி குழந்தையை வாங்க அவனும் முயற்சித்தான்.

ஆனால் என் மகன் பயந்து…என்னை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணத் தொடங்கினான். நானும் , என்னோட மனைவியும் வலுக்கட்டாயமாக அவனை எப்படியாவது யானைக்காரனிடம் ஒப்படைக்க முனைகையில் சட்டென்று அவன் என் கன்னத்தை வாயால்‌ கவ்விக்கடித்தபடி என்னைக் கட்டிக் கொண்டான்.

அவன் கடித்த வலி தாங்காமல் அவனை என்னைவிட்டு பிரிக்கவும் , அவனது வாயை எனது கன்னத்திலிருந்து விடுவிக்கவும் எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. வலி…ஏதோ மிருகம் கடித்தது போலிருந்தது.

எனது மனைவியும் அருகிலிருந்தவர்களும் முயன்றும்…ம்ம்… ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் அவன் கன்னத்தில் சப்பென்று அறைந்ததும்… அவனது வாய் அழுவதற்காக திறந்ததும்…எப்படியோ… ஒருவழியாக என் கன்னம் விடுபட்டது.

சுற்றிலும் இருந்தவர்கள் , " நல்ல புள்ளயப் பெத்தீங்க…"என்று வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு போனார்கள். என்கன்னத்தில் பற்கள் பதிந்த தடம் இருந்தது.

வீட்டுக்கு வந்து சேர்ந்து… சாப்பிட்டு விட்டு… நாற்காலியில் போய் அமர்ந்து… தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கினேன்.

குழந்தைகளை தூங்க வைத்து விட்டு எனது மனைவி நாற்காலியின் அருகில் வந்து நின்றாள். திடீரென்று தொலைக்காட்சியில்… கோயில் அருகில்…மதம் பிடித்த யானை ஒன்று பாகனை தனது முன்னங்காலில் எற்றி எற்றி மிதிக்கின்ற காட்சி ஓடியது. நான் எனது மகன் கடித்தக் கன்னத்தை தடவிக் கொண்டபடி அக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

:musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note::musical_note:

அன்பு மிகு Vinkas தமிழ் ஆசிரியர்க்கு.
வணக்கம்.
என் சிறுகதையினை அனுப்பி உள்ளேன்.
தயவு கூர்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
மிகுந்த அன்புடன் ,
வசந்ததீபன்.
6374081961