Community

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்

கட்டியணைத்து நான் நிற்கும் மரமின்று

கட்டிப்போட்ட துண்டுகளாய் காலடியில்

காரணமறியாமல் நான் நிற்க

கதறிய குரலது சிதறிய மரத்துண்டுகளிடம்!

மனிதாவுனக்கு மனை கட்டிடவே

மரமென்னை வதைத்தாயே

மரணித்தது யான் மட்டுமல்ல

மனையிழந்த பறவைகளுமே!

கொலை செய்ய உம்

கோடாரியின் பிடியாய் நானானேனே

கொலைகாரன் உனக்கு

கேடயமும் நான் தானே!

என் நிழலில் தலைசாய்த்த நீயின்று

என்னில் தலைசாய்க்க விழைந்தாயோ

என் மடியிலுனக்கு தென்றல் வீசிட

என்னை விடுத்து குளிரூட்டி எதற்கோ?

நரம்புகளில் வழியும் செங்குருதியையும்

நண்பாவுனக்கு பிசினாய் வழங்கினேனே

நன்றி மறந்து நந்தவனத்தையும்

நஞ்சாக்கிய காரணமேனோ?

என் கரம் கொடுத்துனக்கு ஊஞ்சலானேன்

என் சிரம் அளித்துனக்கு உணவானேன்

என்னுடல் துறந்துனக்கு ஆசனமானேன்

என்னுயிர் தந்துனக்கு சந்தனப் பேழையுமாகிடுவேன்!

என்னிலிருந்து பிறந்தயென் தாளிடமே

எங்கள் கீர்த்தியை எழுதிவிடு

எட்டுத்திக்கும் பரவட்டுமெங்கள் மரண ஓலமெனக் கதறிட

எண்ணிப்பார்த்த நினைவுகளாலின்று நனைந்ததென் வரிகள்!

3 Likes