Community

தாய்மொழி மறந்த கிளிகள் - பேராசை - இறந்த கல்லறைகள்

தாய்மொழி மறந்த கிளிகள்

பசியினை மறந்தன
ஆலயக் கிளிகள்
அகவலை மறந்தன
அடைநாள் கிளிகள்

தேடலை மறந்தன
வளர்ப்புக் கிளிகள்
தேவையை மறந்தன
தேவதைக் கிளிகள்

ஆகாயம் மறந்தன
கூண்டுக் கிளிகள்
பசுமையை மறந்தன
பஞ்சவர்ணக் கிளிகள்

தாய்மொழி மறந்தன
பேசிய கிளிகள்
நாத்திகம் மறந்தன
ஜோசியக் கிளிகள்

பேராசை

ஒரு பூவுக்கு கூட
பறக்கும் ஆசை இல்லை

ஓர் இலைக்கு கூட
பூவின் வண்ணத்தின் மேல்
பொறாமை இல்லை

ஒரு வேருக்கு கூட
ஆகாயம் பார்க்கும்
எண்ணம் இல்லை

உயிர்ப்பு ஒன்றைத் தவிர
மற்றொன்றை விரும்பும்
எல்லாமே பேராசை
என்பது தான்
வாழ்தலின் தொடக்கம்

இறந்த கல்லறைகள்

நினைவேந்தல்கள் மறக்கப்பட்ட
மூன்றாம் தலைமுறைக்
கல்லறைகளைக்
கட்டிப் பிணைந்து
உறவாடிக்கிடக்கின்றன
ஊருக்குள் வழக்கொழிந்த
பிரண்டைக் கொடிகள்