Community

காமம் இல்லா காதல்

காமம் தொலைத்து காதல் தேடி தேடி
நான் கண்ட கனவு சொப்பனம் நீ…

நிழலுக்கும் நிஜத்திற்கும் நடுவே
பிதற்றும் பேதை நான்
இது காதல் பித்து…

முத்தம் ஒன்றை பறக்க விட்டு செல்
என் பித்தம் தெளிந்து உயிர் வாழ…

பறக்கும் முத்தத்தில் உன்
கள்ள சிரிப்பையும் சேர்த்து விடு
என் ஆயுள் நீள…

உன் ஒற்றை முத்தத்தில் மடிந்து
உயிர்த்தெழுவேன் மீண்டும்
உன் ஒற்றை முத்தத்திற்காய் …

மிச்சமென்று ஏதும் இன்றி மொத்தமாய்
அணைத்து விடு உன் மோக தீயை …
காதலிப்போம் வா…

உன் காதல் கிறுக்கல்களை
நம் பிள்ளைகளுக்கு சொல்லி சிரித்திட
மோகம் இன்றி காதல் செய்…

அழுது பிதற்றி அடம்பிடிக்கும் என்னை
உன் மடியில் வீழ்த்த காதல் செய்…

தத்தி தத்தி தள்ளாடும் வயசில்
நம்மை தாங்கி புடித்திட காதல் செய்…

காதல் குன்றி காமம் தலைக்கேறும் முன்
காதலிப்போம் வா…

நம் காதலின் அஸ்திவாரமாய்
என் இதயத்தை நிரப்பி விடு
உன் காதலால்…

உன் நெத்தி முத்தம் தரும் சிலிர்ப்பு
வேறொன்றிலும் கண்டதில்லை இதுவரை…

உன் அவசர முத்தம் ஆயிரம் கதை பேசி
செல்லும் என் உதட்டோரம்…

நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
நாம் இன்றி காதல் இல்லை…

காதலிப்போம் வா…

கிறுக்கல்களை கவிதையாய் ரசிக்க வைப்பதும்
ரசிகனை கிறுக்கனாய் ஆட்டுவிப்பதும்
காதல் ஒன்றே என என் காதோரத்தில்
உளறி விட்டு போ…