Community

கொன்று குவிக்கும் கொரோனா

சீனாவில் சினைஉற்று
சீரழிக்கும் சிசுவாகி,
சிதைவை மூச்சாக்கி
சினம்கொண்டு திரிகிறாய்.
ஆறுதலுக்கு ஆள்இன்றி
ஆற்றிட வழியும்இன்றி,
அப்பாவிகளின் கண்ணீரும்
ஆழ்கடல் சேர்ந்திடவே
ஆற்றினில் கலந்திடுதே.
கருகாணும் உயிரணுவும்
கருவினில் சிதைந்திட,
கடவுளை துதிக்கிறது.
மாசரியா மழலைகள்
மாண்டு புதைவதிலே,
மகிழ்வுஎன்ன உனக்கு!
அண்டி பிழைப்பதற்கு
அயல்நாடு சென்றவரும்,
அன்னை நாடுதேடி
அரை உயிரோடு,
அனாதையாய் திரியும்
அவலநிலை ஆனது.
தீண்டாமை ஒழிந்திட
திக்கெட்டும் குரலெழுப்பி
திரிந்து கிடக்கையிலே,
தீண்டாமல் இருந்தாலே
திசைஅறியாமல் போகும்
தீராநோய் என்றார்கள்.
வானுயர வளர்ச்சிபேசும்
மண்ணுலகின் மனிதர்களும்,
வழிகாண வக்கற்று
வதங்கி நிற்கின்றனர்.
பாமரனின் வாழ்விற்கு
பால்ஊற்றும் நிலையானது.
உலகின் கடவுள்எல்லாம்
ஒன்று கூடி உறங்கிவிட,
அகிலத்தின் அழுகுரல்
அணையாமல் கேட்கிறது.
தினம் உழைத்தாலே
திணறும் வாழ்க்கைஇங்கு.
உழைப்பின்றி உயிர்வாழ
உலகினில் வழிஉண்டோ!
பட்டினியும் பழகிவிட
பசிவயிறும் அதைமறக்க,
உயிர்தாங்கிய பிணங்களாக
உலகத்தின் உயிர்கள்இங்கு
உணர்வின்றி ஊமையாய் வாழ்கிறது.