Community

மனநலமே பலமென்று உணர்!

       மனநலமே பலமென்று உணர் !

மனிதா… மனம் பற்றி
மனம் திறந்தது உண்டா?
மனம் நலம் பெற…
மன்றாடியது உண்டா?

பிறர் மனமறிய முயற்சித்ததில்
தன் மனமறிய முற்படவில்லையே…
சுயநலத்தை சிந்தையில் நிறுத்தி
மனநலத்தை சிதறவிட்டாயே !

ஆசை எனும் ஆழியின்
ஆழம் அறியாமல்
அதில் மனம் அதை
அலைபாயவிட்டாயே !

மனம் போன போக்கில்
மௌனமாய் சென்றாயே… தவிர
மனமெனும் குதிரைக்கு
கடிவாளம் இடவில்லையே !

புற அழகை அழகென்று
பற்றி அதை அழகுப்படுத்தி…
அக அழகை அணு அளவும்
ஆராயத் தவறினாயே !

அன்பிற்கும் மோகத்திற்கும்
அர்த்தம் அறியாமல்…
மோகம் கொண்டு மனமதை
மோசமாக்கினாயே !

தூய எண்ணங்களால் மனதை
தூய்மை ஆக்காமல்…
துட்சமான எண்ணங்களால்
துவள வைத்தாயே !

போற்றலுக்குரிய பெருந்தன்மையை
போக்காய் புறந்தள்ளி…
தூற்றலுக்குரிய பொறாமையை
துணையாய் பற்றினாயே !

மனம் இருந்தால்
மார்க்கம் உண்டு என்றாயே… அந்த
மனம் நலமாக இருக்க
மார்க்கம் ஒன்று தேடவில்லையே !

மனிதா…வாழ்வு வளம்பெற
மற்றவை அனைத்தும் இருந்தும்
மனநலம் இல்லாதது பலவீனமே…
மனமே உன் பலம் என்று உணர் !

அற்பங்களே அரிதெனக் கருதும்
அறியாமை இருள் கடந்து…
அனைத்திற்கும் ஆதி மனம் என்று
அதன் ஆரோக்கியம் பேண் !

அகண்ட அகிலத்தில்…
மனநிம்மதி அடைந்து
மகிழ்ச்சியாக வாழ்வதே…
மனிதன் பெறும் வரமாகும் !

மனதை கட்டுக்குள் வை…
மனம் அதை அன்பால் நிரப்பு…
மகத்தான சிந்தனைகளில் திளை…
மாயை எனும் மதில் தாண்டு !

மனக்குமுறலை உடைத்தெறி…
மனதின் மோகம் போக்கு…
மலர்போல் மென்மையாக்கு…
மனம் அதை உணர முற்படு !

மாற்றத்தை ஏற்கப் பழகு…
மனம் விட்டுப் பேசு…
மழலைச் சிரிப்பில் தன்னிலை மற…
மனிதத்தோடு வாழ்ந்துவிட்டு போ !!
- சுபா

1 Like