Community

பேரன்பும் பெருங்குற்றமும்

தானொருவன் தானிங்கு
வேறாரும் இங்கில்லை
எனநினைத்து பலபேர்
வாகனம் ஓட்டுவதுண்டு

அதன் விளைவாகவே
கருந்தார் ரோட்டில்
செங்குருதி ஆறாக
அவ்வப்போது ஓடுவதுண்டு

அப்பொழுது நாங்கள்
செய்தியாளனைப் போல
அடிபட்ட மனிதர்,
வழியும் ரத்தம்,
கிழிந்த சதை,
சிதறிய உறுப்பு எனத்
தேடிப் படமெடுத்து
பகிர்ந்திடுவோம் இணையத்தில்

அன்று அந்த பையனை
அள்ளி மடியிலிட்டு
அழுவும் அந்த அம்மாவைப்
படமெடுத்த நாங்களெல்லாம்
அந்தப்பையனின் சொந்த அம்மா
அந்தாம்மாதான் எனநினைத்தோம்

“யார் பொத்தப் புள்ளையோ” என்று
அழும்போதுதான் புரிந்தது
அந்த அம்மாவும் அந்த வழியில்
வந்த பெண்ணென்று

“இந்த பேரன்பைக் கண்ட வானம்
மெல்லக்கசியத் தொடங்கியதென்று” பதிவிட்டேன் இணையத்தில்
மழைபோல் எனக்கும்
பாராட்டுக்கள் பொழிந்தது

ஏனோ?
இந்த வானத்தின் கீழ்தான்
இடித்துச்சென்ற கார்காரனும்
துடித்துக் கிடந்த பையனும்
படமெடுத்த நாங்களும்
அந்த அம்மாவும் வாழ்கிறோம்…