Community

வானம் வசப்படும்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

சுட்டெரிக்கும் சூரியனும்
சூழ்நிலை மேகத்தால்
சுகமிழந்து போகிறது!
விண்ணழகு நிலாவும்
விலக்கு நாளென்று
விடுமுறை ஆகிறது!
வாழும் நாட்களில்
வரவும் செலவும்
விடிந்தால் மாறிக் கிடக்கிறது!
இருளை ஒளி ஆள்கிறது
ஒளியை இருள் சூழ்கிறது
விதியை மதியால் வெல்லும்
கலியுகம் தன்னில்- யான்
வாழ்ந்ததின் சுவடின்றி
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

இறகைச் சிலுப்பும்
காக்கைக் கூட்டம்
இதயத்தில் நிரப்பும்
ஒற்றுமை நாட்டம்!
இரவில் உருகும் மெழுகாய்
மனதின் இயலாமையது
கருகும் மெதுவாய்!
பாரெங்கும் கொண்டுள்ள
அறியாமை அகன்றிருக்க,
பழம்பெரும் தமிழரின்
அறிவாற்றல் தெளிந்திருக்க,
முட்டுக்கட்டைகள் முடிவுறாவிடினும்
தட்டிக் கொடுக்கும் உறவுகளிருக்க
முட்டி முளைக்கும் விதையாவேன்- யான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ??

எட்டுத்திக்கும் பரவிக் கிடக்கும்
எதிர் மருந்தில்லா கரோனாவும்
கட்டுக்குள் வரும்நாள் தூரமில்லை
கவலை கொள்ளவும் தேவையில்லை
விட்டுத் தள்ளனும் வீண்பயணம்
விலகி இருக்கனும் ஊருசனம்
கற்றுக்கொள்ளனும் கடிவாளம்
கடந்தபின் வசமாகும் தொடுவானம்
நினைவில் நிறுத்தி
நெஞ்சம் நிமிர்த்தி
வீட்டையும் நாட்டையும்
காத்திடும் கடன்கொண்டு
வீறுடன் திறம்கொண்டு
வாழ்ந்திடுவேன் - யான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ???

2 Likes

வாசியுங்கள்!
வாழ்க்கையை நேசியுங்கள்!!

வாசியுங்கள்!
வாழ்க்கையை நேசியுங்கள்!!