Community

பெண்ணியம் போற்றுவோம் எக்காலத்தில்

பெண்ணாய் பிறந்ததாலோ என்னை
பிழையாய் பேசியவர்கள் சிலர்…
வளர்ந்த பின்னே தலைநிமிராதே
என தடையாய் நின்ற சிலர்…
வயது வந்தும் வானை பார்க்காதே
என வயதானவர்கள் சிலர்…
என்னை போகப்பொருளாக நினைத்து
தேகம் தொட நினைத்தவர்கள் சிலர்…
சுதந்திரமாய் சுற்றித்திரியாதே
என சுற்றியிருந்தவர்கள் சிலர்…
நான் பிறந்த பிறப்பிலே குற்றம் கண்டு
சிசுவிலே சிதைத்து போனவர்கள் சிலர்…
வீட்டை தாண்டினாள் வீணாய் போய்விடுவாய்
என வீணாக பேசியவர்கள் சிலர்…
அழகாய் இருக்கவேண்டும் என நினைத்தால்
ஆயிரம் தவறுகள் பேசுபவர்கள் சிலர்…
ஆணிடம் பேசினாலே அசிங்கமாய்
பேசுபவர்கள் சிலர்…
எது செய்தாலும் வீணாய் போனவள்
என திட்டியவர்கள் சிலர்…
வரதட்சணை என்னும் பெயரில் என்னை
விற்று சென்றவர்கள் சிலர்…
கால்கட்டு என்ற பெயரில்
என் கனவை எரித்த சிலர்…
வீட்டில் வேலை இயந்திரமாய்
எண்ணி நினைத்தவர்கள் சிலர்…
பெண் குலத்தையே ஏளனமாய்
எண்ணி நினைத்தவர்கள் பலர்…