Community

அவனென்ற நான்

உன்னை அறிவேன்
நான், நீ என்பதையும் மறவேன்
நீ ரசிக்கும் பற்பலவற்றை
உனக்கே தெரியாமல் ரசிப்பவள் நான்
நேசம் கொண்டவன் நீ என்பதால் !
வெள்ளைநிற தாள் தொடங்கி
கொள்ளைக்கொள்ளும் இதயங்கள்வரை
அனைத்துமே அழகுதான் உன் பெயர் தாங்கிட !
உன்னை பார்த்திடும் விழிகளை அகற்றாமலும்
உன் விழி என்னை பார்த்துவிடக்கூடாது என்ற பதற்றத்துடனும்
என்னில் பூத்த புன்னகையை மறைத்துக்கொண்டும்
நாட்கள் நகர்கின்றன…
நீயும் புன்னகைத்தாய் !
கனவென்றுதான் நானும் நினைத்தேன் !
கானல் நீர்தான் என்றாலும் கைகளில் அள்ளிட ஆசை பூண்டேன் !
பூரித்திருந்தேன்
எனக்கு பின்னால் அமர்திருந்த உன் காதலியிடம், நீ அள்ளிக்கொடுத்த குருநகைக் கண்டு !
உனக்கென நான் வார்த்தைகளால் கோர்த்த முதல் கடிதம்…
“இமைக்காத விழிகள்,
பேசாத மௌனம்,
நீங்கா புன்முறுவல்,
செவிகளில் ஓயாத இசை,
மொழியா காதல்,
உன்னை கண்ட ஓர் நொடி !”…
மறக்க மனமில்லாதவளாய் "அவனென்ற நான் "!